Jun 7, 2026
Thisaigal NewsYouTube
பாரிசான் கூட்டணியுடன் நேரடி மோதலைத் தவிர்க்க வேண்டும்: பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கு அன்வார் அறிவுறுத்தல்
அரசியல்

பாரிசான் கூட்டணியுடன் நேரடி மோதலைத் தவிர்க்க வேண்டும்: பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கு அன்வார் அறிவுறுத்தல்

Share:

கோலாலம்பூர், ஜூன்.07-

ஜோகூர் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணிக் கட்சிகள் ஒன்றுக்கொன்று எதிராக போட்டியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவரும், பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.

ஒற்றுமை அரசாங்கத்தில் இரு கூட்டணிகளும் பங்காளிகளாகச் செயல்பட்டு வரும் நிலையில், மாநிலத் தேர்தலில் நேரடி மோதல் தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

பத்து பஹாட்டில் நேற்று நடைபெற்ற ஜோகூர் பக்காத்தான் ஹரப்பான் தேர்தல் இயந்திர அறிமுக நிகழ்ச்சியில் உரையாற்றிய அன்வார், பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் கட்சிகள் ஒருவருக்கொருவர் எதிராகப் போட்டியிடும் நிலைமை தங்களுக்குத் தலைவலியை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அம்னோ மற்றும் பாரிசான் நேஷனலுடன் தேர்தல் களத்தில் மோதிக் கொண்டிருக்கும் தாங்கள், புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அவர்களுடன் பக்கத்தில் அமர்ந்து பணியாற்ற வேண்டியுள்ளது என்றும் நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டு, கூட்டணிக் கட்சிகள் பரஸ்பர புரிதலுடனும் ஒத்துழைப்புடனும் செயல்பட வேண்டும் என்றும் அன்வார் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், கடந்த ஜூன் 1-ஆம் தேதி, ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலத் தேர்தல் அடுத்த 60 நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News