சிலாங்கூர், நவ. 28-
சிலாங்கூர் மாநிலத்தில் அதிக வேலை வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டை சிலாங்கூர் மனித வளம் மற்றும் வறுமைத் துடைத்தொழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு மறுத்துள்ளார்.
இவ்வாறு கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். சிலாங்கூர் மாநில மக்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில் சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவுடன் இணைந்து Karnival Jelajah Jobcare Selangor எனும் வேலை வாய்ப்புச் சந்தைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக பாப்பா ராய்டு குறிப்பிட்டார்.

இதுவரையில் ஒன்பது இடங்களில் நடத்தப்பட்ட Jobcare வேலை வாய்ப்புச் சந்தைகள் வாயிலாக 860 பேருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பாப்பாராய்டு விளக்கினார்.
கிள்ளான், ஷா ஆலாம் மற்றும் பெட்டாலிங் ஜெயா ஆகிய மாவட்டங்களில் மட்டும் கவனம் செலுத்திக்கொண்டு இருக்காமல் இது போன்ற வேலை வாய்ப்புச் சந்தைகளை சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
இன்று கிள்ளானில் சொக்சோ அலுவலகத்துடன் இணைந்த நடத்தப்பட்ட Jobcare வேலை வாய்ப்பு சந்தையைப் பார்வையிட்டப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பாப்பாராய்டு இதனை தெரிவித்தார்.

வரும் டிசம்பர் 14 ஆம் தேதி சபாக் பெர்ணமில் பெரியளவில் இந்த வேலை வாய்ப்பு சந்தை நடத்தப்படவிருப்பபதையும் பாப்பாராய்டு விவரித்தார்.
பல்கலைக்கழகத்திலிருந்து வருகின்ற மாணவர்கள் குறிப்பிட்ட வேலை வாய்ப்புக்காக காத்திருக்காமல் கிடைக்கின்ற வேலை வாய்ப்புகளை கைப்பற்றிக்கொண்டு, அவற்றின் வாயிலாக தகுதிகளை வளர்த்துக்கொண்டு, அடுத்த கட்ட முன்னெடுப்பை மேற்கொள்ளுமாறு பாப்பாராய்டு ஆலோசனைக்கூறினார்.








