புத்ராஜெயா, நவ. 25-
அந்நிய நாட்டவர்கள், 30 நாட்களுக்கு மேற்போகாமல் மலேசியாவில் தங்கியிருப்பதற்கு ஓன்லைன் டிஜிட்டல் சிறப்பு அனுமதி அட்டையை அறிமுகப்படுத்தும் திட்டத்தை குடிநுழைவுத்துறை அமல்படுத்தவிருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் அறிவித்துள்ளார்.
இஎஸ்பி எனும் இந்த டிஜிட்டல் சிறப்பு அனுமதி அட்டையை பெறுவதற்கு அந்நிய நாடடவர்கள் ஓன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்யலாம். இந்த புதிய நடைமுறை வரும் ஜனவரியில் அமல்படுத்தப்படவிருப்பதாக சைபுடின் குறிப்பிட்டார்.
மலேசிய அரசாங்கத்துடனான அலுவல்களை விரைவுப்படுத்தவும், நிர்வாகத்திறனை வளப்படுத்தவும் டிஜிட்டல் எனப்படும் இலக்கவியல் மயமாக்குதல் நடைமுறையை மேம்படுத்தும் முயற்சிகளில் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
1963 ஆம் ஆண்டு குடிநுழைவுச்சட்டத்தின் கீழ் அந்நிய நாட்டவர்கள் மலேசியாவில் 30 நாட்களுக்கு மேற்போகாமல் தங்கிச்செல்வதற்கான உரிமையை இந்த டிஜிட்டல் சிறப்பு அட்டை வழங்குகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
புத்ராஜெயாவில் இன்று உள்துறை அமைச்சின் மாதாந்திர பேரணியில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ சைபுடின் இதனை தெரிவித்தார்.
அந்நிய நாட்டவர்கள் தற்போது, இத்தகைய சிறப்பு அட்டையை பெற வேண்டுனால், குடிநுழைவுத்துறை அலுவலகங்களுக்கு நேரடியாக வருகை புரிய வேண்டும். வரும் ஜனவரி முதல், இந்த சிறப்பு அட்டைக்கு ஓன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் விளக்கினார்.








