Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சொந்தக் கூட்டணியிலேயே கெராக்கான் கட்சிக்கு அவமரியாதை
அரசியல்

சொந்தக் கூட்டணியிலேயே கெராக்கான் கட்சிக்கு அவமரியாதை

Share:

சொந்தக் கூட்டணியில் கெராக்கான் கட்சிக்கு நேர்ந்துள்ள அவமதிப்பு, நாளை அக்கூட்டணியிலுள்ள இந்திய பிரதிநிதிகளுக்கும் நடக்கலாம் என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கோடிகாட்டினார்.

இனவாத அரசியலை விட அபாயகரமான சமய அரசியலை கையில் ஏந்தியிருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தலைவர்கள், ஒட்டுக்காக இந்தியர்களை கறிவேப்பிலையாய் பாவித்து வீசப்போகிறார்கள் என்ற எச்சரிக்கை வேட்டையும் அவர் கிளப்பினார்.

இதற்கு முன் ஒரு குறுகிய கால ஆட்சிப் பீடத்தில் பெர்சத்து கட்சி வீற்றிருந்த போது, இந்தியர் நலனுக்கான எந்தவொரு நடவடிக்கையும் திட்டத்தையும் அது மேற்கொள்ளவில்லை. அதை விட குறுகிய காலக்கட்டமான இந்த மாநிலத் தேர்தல் நெருங்கிய போது, இந்தியர் விவகாரங்கள கவனிக்க சிறப்புக் குழு அமைக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்தது.

ஆனால், அக்குழுவுக்கு தலைமையேற்கும் வாய்ப்பை ஓர் இந்தியத் தலைவருக்கு வழங்காதது ஏமாற்றமே என பிரதமர் துறையின் கீழ் செயல்படும் மித்ரா சிறப்பு பணிக்குழுவின் தலைவருமான டத்தோ ரமணன் சுட்டிக்காட்டினார்.

சமய அரசியலை முன்னிறுத்தியிருக்கும் பெரிக்காத்தான் கூட்டணி, இந்தியர்களின் நலன் மீது எந்தளவுக்கு உண்மையாக இருக்கும் என்ற சந்தேகமும் அதன் தலைவர்களின் அண்மைய கால செயல்பாடுகளால் எழுகிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சுங்கை டுவாவில் நடத்தப்பட்ட பாஸ் கட்சிக் கூட்டத்தில் இருந்து கெராக்கான் கட்சித் தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் வெளியேற்றப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டது தொடர்பில் டத்தோ ரமணன் கருத்துரைத்தார்.

Related News