கோலாலம்பூர், நவம்பர்.01-
கடந்த 2003-ஆம் ஆண்டு, பிரதமர் பதவியிலிருந்து தான் ஓய்வு பெற்ற பிறகு, அம்னோ துண்டு துண்டாக உடைந்து, மலாய் அரசியல் ஆதரவு பல கட்சிகளாகப் பிரிந்து விட்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
கடந்த 1981 முதல் 2003-ஆம் ஆண்டு வரை, தான் பிரதமராகவும், கட்சித் தலைவராகவும் இருந்த காலத்தில், அம்னோவில் அனைத்து மலாய்க்காரர்களும் ஒற்றுமையாக இருந்தனர் என்று பேட்டி ஒன்றில் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
மலாய் இனத்தின் ஒற்றுமை மலாய்க்காரர்களுக்குப் பலத்தைக் கொடுத்தது என்று குறிப்பிட்டுள்ள மகாதீர், அவர்கள் தேர்தல்களில் வெற்றி பெறக் காரணமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், கட்சியை யார் வழிநடத்தப் போகிறார்கள் அல்லது தலைவருக்குப் பிறகு யார் வெற்றி பெறுவார்கள் என்பதில் எந்த சர்ச்சையும், குழப்பமும் அப்போது இருந்தது இல்லை என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தான் பிரதமர் பதவியிலிருந்தும், அம்னோ தலைவர் பதவியிலிருந்தும் விலகிய பிறகு, இந்த நிலைமை முற்றிலும் மாறிவிட்டது என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.








