கோலாலம்பூர், டிச.10-
வங்காளதேசத்தில் சிறுப்பான்மை இனத்தவர்களான இந்துக்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டுள்ள வன்முறை யை கண்டித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குரல் எழுப்ப வேண்டும் என்பதுடன் இவ்விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் தலைமையில் இந்து எம்.பி.க்கள் சிலர் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் அனைத்து ஊடகங்களிலும் வெளியிடப்பட்ட செய்தியின்படி, வங்காளதேச இடைக்கால அரசுக்கு தலைமையேற்றுள்ள சிறப்பு ஆலோசகரான முகமட் யூனுஸ் தான், மாணவர் ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து திட்டமிட்ட வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளார் என்று ஆட்சிக் கவிழ்க்கப்பட்டுள்ள வங்காளதேச முன்னாள் பிரதமர் Sheik Hasina அம்பலப்படுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது என்று ராயர் தெரிவித்தார்.
பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள் குறித்து தாம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, வன்முறைகள் உலகில் எந்தப்பகுதியில் நிகழ்ந்தாலும் பாதிக்கப்படும் சிறுபான்மை மக்களுக்காக தாம் குரல் எழுப்புவதுடன் தலையிடவும் நேரிடும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் உறுதி அளித்து இருந்தார்.
அந்த உறுதிப்பாட்டிற்கு ஏற்ப வங்காளதேசத்தில் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் வன்முறைக்கு எதிராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலையிட வேண்டும். அந்த நாட்டில் நிகழும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு குரல் எழுப்ப வேண்டும் ராயர் கேட்டுக்கொண்டார்.

இன்று நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் செனட்டர் டாக்டர் R. A. லிங்கேஸ்வரன், பத்து எம்.பி. P. பிரபாகரன், சுங்கை சிப்புட் எம்.பி. எஸ்.கேசவன் மற்றும் கிள்ளான் எம்.பி. வீ. கணபதிராவ் ஆகியோருடன் இணைந்து நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் ராயர் இக்கோரிக்கையை முன்வைத்தார்.
இவ்விவாகாரம் தொடர்பில் வங்காளதேத் தலைவருடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பேச்சுவார்தை நடத்துவார் என்று இந்து எம்.பி.க்களான தாங்கள் நம்புவதாக ராயர் குறிப்பிட்டார்.
வங்காளதேசத்திற்கு தலைமையேற்ற ஷேக் ஹஸினா தலைமையிலான அவாமி லீக் கட்சி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டப் பின்னர் இடைக்கால அரசாஙகம் அமைந்த இந்த இரண்டு மூன்று மாதங்களில் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக வன்முறை பெரியளவில் கட்டவிழ்க்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள், இந்துக்கள் என்ற முறையில் தங்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ராயர் தெரிவித்தார்.








