கோலாலம்பூர், நவ. 9-
இவ்வாண்டில் இதுவரையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 75.8 விழுக்காட்டு இலக்கை, நாடு அடைந்துள்ளதாக நகர் மற்றும் புறநகர் திட்டமிடல் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் அலியாஸ் ரம்லி தெரிவித்தார்.
மலேசியாவில் 6 மாநகரங்களில் மட்டுமே மக்களின் அடர்த்தி நிலை பதிவாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். கோலாலம்பூர், புத்ராஜெயா, ஷா ஆலாம், பினாங்கு, ஜோகூர்பாரு மற்றும் மலாக்கா ஆகியவை மக்களின் அடர்த்திக்குரியப் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மாநகரங்களை நோக்கி மக்களின் நகர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு பார்க்கையில், வருகின்ற 2030 ஆம் ஆண்டில் மக்களின் எண்ணிக்கையில் 80 விழுக்காட்டினர், நகரங்கள், மாநகரங்கள் மற்றும் தலைப்பட்டிணங்களில் வசிக்கக்கூடியவர்களாக இருப்பர் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மாநகரங்களில் மக்களின் அடர்த்தி நிலையை கருத்தில் கொண்டு, கால்வாய் விரிவாக்கம், குடிநீர் மற்றும் மின்சார விநியோகம் போன்ற அடிப்படை வசதிகளை இப்போதே மேம்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.








