கோலாலம்பூர், ஜூலை.26-
சர்ச்சைக்குரிய தொழிலதிபர் Nicky Liow Soon Hee, பிகேஆர் கட்சியின் உறுப்பினர் அல்ல என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் ஃபுஸியா சாலே விளக்கம் அளித்துள்ளார்.
பிகேஆர் தலைவரும், பிரதமருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் Nicky Liow இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவர் கட்சியுடன் தொடர்புடையவர் என்ற ஊகங்கள் எழுந்தன.
இதனையடுத்து, கட்சியின் உறுப்பினர் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவித்த ஃபுஸியா சாலே, Nicky Liow பெயர் உறுப்பினர் பட்டியலில் இல்லை என்றும், அவர் பிகேஆர் உறுப்பினராக சேர எந்த விண்ணப்பமும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.
Winner Dynasty Group குழுமத்தின் நிறுவனரான Nicky Liow, மோசடி மற்றும் இணையக் குற்றங்களில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஒருவர் என்பதோடு, ஓர் ஆண்டுக்கும் மேலாக தலைமறைவாகி பின்னர் சரணடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2022-ஆம் ஆண்டு ஷா ஆலாம் Sessions நீதிமன்றத்தில், 36 மில்லியன் ரிங்கிட் பணமோசடி தொடர்பாக 26 குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.








