Jan 24, 2026
Thisaigal NewsYouTube
சபா இடைத்தேர்தலில் 36 வாக்குச் சாவடிகளில் வாக்களிப்புகள் தொடங்கின: 48,722 பதிவுச் செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்
அரசியல்

சபா இடைத்தேர்தலில் 36 வாக்குச் சாவடிகளில் வாக்களிப்புகள் தொடங்கின: 48,722 பதிவுச் செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்

Share:

கோத்தா கினபாலு, ஜனவரி.24-

சபா மாநிலம், கினபாத்தாங்கான் நாடாளுமன்றம் மற்றும் லாமாக் சட்டமன்ற இடைத்தேர்தல்களில், இன்று காலை 9 மணி நிலவரப்படி, 12.54 விழுக்காடு மற்றும் 10.57 விழுக்காடு வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இன்று காலை 7.30 மணியளவில், மொத்தம் 36 வாக்குச் சாவடிகள் வாக்காளர்களுக்காகத் திறக்கப்பட்டன.

அவற்றில் பெரும்பாலான மையங்கள் மாலை 5.30 மணிக்கு மூடப்படத் திட்டமிடப்பட்டுள்ளன.

மொத்தம் 48 ஆயிரத்து 722 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இன்று வாக்களிக்கவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அவர்களில் 48 ஆயிரத்து 526 சாதாரண வாக்காளர்களும், 196 முன்கூட்டியே வாக்காளர்களான போலீஸ் மற்றும் அவர்களது துணைவியாரும் அடங்குவர்.

மும்முனைப் போட்டி நிலவும் கினபாத்தாங்கான் தொகுதியில், பாரிசான் நேஷனல் வேட்பாளர் நாயிம் குர்னியாவான் புங்கை எதிர்த்து, வாரிசான் கட்சியைச் சேர்ந்த டத்தோ சாடி அப்துல் ரஹ்மானும், சுயேட்சை வேட்பாளரான வழக்கறிஞர் கோல்டாம் ஹாமிட்டும் போட்டியிடுகின்றனர்.

மேலும், லாமாக் சட்டமன்றத் தொகுதியில், பாரிசான் நேஷனல் வேட்பாளர் முஹமட் இஸ்மாயில் அயோப்பை எதிர்த்து வாரிசான் கட்சியைச் சேர்ந்த அப்துல் மாலேக் சுவாவும் போட்டியிடுகின்றனர்.

கின்பாத்தாங்கான் நாடாளுமன்றம் மற்றும் லாமாக் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின், கடந்த ஆண்டு, டிசம்பர் 5ஆம் தேதி, உடல்நலக் குறைவால் காலமானதையடுத்து, அவரது தொகுதிகளில் இந்த இடைத்தேர்தலானது நடைபெற்று வருகின்றது.

கடந்த 15-வது பொதுத் தேர்தலில், கினபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட Mazliwati-யை தோற்கடித்த புங் மொக்தார், 4,330 வாக்குகள் பெரும்பான்மையுடன் அத்தொகுதியைத் தக்க வைத்தார்.

அதே வேளையில், கடந்த ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி, நடைபெற்ற சபா மாநிலத் தேர்தலில், ஆறு முனைப் போட்டி நிலவிய லாமாக் சட்டமன்றத் தொகுதியில் 153 வாக்குகள் பெரும்பான்மையுடன் புங் மொக்தார் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News