கங்கார், டிசம்பர்.26-
பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து, அம்மாநிலத்தில் மூன்று சட்டமன்ற தொகுதிகள் காலியாகியுள்ளன.
இந்நிலையில், அத்தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், பெர்சாத்து மற்றும் பாஸ் கட்சிகளுக்கு இடையில் மோதல் வெடிக்கும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் ஆய்வாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் மாநில சட்டமன்றம் தானாகவே கலைந்துவிடும் என்பதால், சூப்பிங், பிந்தோங் மற்றும் குவார் சஞ்சி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
என்றாலும், பெர்லிஸ் சபாநாயகர் Rus’sele Eizan, நடப்பு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை உறுதிச் செய்ய காலியாக உள்ள சட்டமன்றங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
பாஸ் மற்றும் பெர்சாத்து கட்சிகளுக்கு இடையிலான பிளவு கடுமையானதாக இருக்கும் என்றும், இடைத்தேர்தல்கள் நடந்தால் அது நேரடிப் போட்டிக்கு வழிவகுக்கும் என்றும் நுசாந்தாரா அகாடமியைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் அஸ்மி ஹசான் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பெர்லிஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர், பெர்லிஸ் ராஜா துவாங்கு சையிட் சிராஜுடின் புத்ரா ஜமாலுலாயிலைச் சந்தித்து, மாநில மந்திரி பெசார் முகமட் ஷுக்ரி ரம்லிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைத்து, அவருக்குத் தாங்கள் வழங்கி வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, பாஸ் கட்சி தனது மூன்று சட்டமன்ற உறுப்பினர்களைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.








