ஷா ஆலாம், நவம்பர்.22-
பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இசா அன்வாரை அடுத்த சிலாங்கூர் மந்திரி பெசாராக நியமனம் செய்ய, தாம் முன்மொழிந்திருப்பதை, அம்மாநில நடப்பு மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி ஒப்புக் கொண்டுள்ளார்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் நடத்தி வரும் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமிருடின் ஷாரி, மந்திரி பெசார் பதவிக்கு நூருல் இசா தகுதியானவர் என்று தாம் நம்புவதாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
நூருல் இசாவிற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்று குறிப்பிட்டுள்ள அவர், இதனை யாரும் வாரிசு அரசியல் என்று கூறி களங்கப்படுத்திவிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தாம் ஏற்கனவே நூருல் இசாவிடம் கலந்தாலோசித்திருப்பதாகவும், அதனை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாமல் போவதும் அவரது விருப்பம் என்றும் அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நூருல் இசாவின் நியமனம் என்பது அமிருடின் ஷாரியின் தனிப்பட்ட கருத்து என்று கூறியுள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அது பற்றி தன்னிடம் அவர் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.








