நெகிரி செம்பிலான் யாங் டி பெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரின் பதவி தொடர்பான அரசியல் சாசன விவகாரத்தில், மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் பத்து முன்னாள் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
துவாங்கு முஹ்ரிஸை பதவியிலிருந்து அகற்றும் நடவடிக்கை, நெகிரி செம்பிலான் அரசியல் சாசனத்தின் 1959-ஆம் ஆண்டு சட்டப் பிரிவு 10-ன் கீழ் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
அந்தச் சட்டப் பிரிவின்படி, ஓர் ஆட்சியாளரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கு முன்பு உண்டாங்-களால் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், துவாங்கு முஹ்ரிஸுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டதா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதியிட்டதாகக் கூறப்படும் பிரகடனம் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதலமைச்சரால் கையெழுத்திடப்பட்டிருப்பது குறித்தும் அவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
மாநில ஆட்சிக்குழுவுக்கு ஆட்சியாளரை ஒருதலைப்பட்சமாகப் பதவியிலிருந்து அகற்ற அரசியல் சாசன அதிகாரம் இல்லை என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் பத்து மலேசிய வழக்கறிஞர் மன்ற முன்னாள் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.








