Feb 24, 2026
Thisaigal NewsYouTube
அன்வாருக்கு ஆதரவாக 6 எம்பிக்களைத் திரட்டியதாக பொய்யான அறிக்கை: ரேட்ஸுவான் யுசோஃப் மீது ஹம்ஸா 100 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கு
அரசியல்

அன்வாருக்கு ஆதரவாக 6 எம்பிக்களைத் திரட்டியதாக பொய்யான அறிக்கை: ரேட்ஸுவான் யுசோஃப் மீது ஹம்ஸா 100 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.24-

எதிர்கட்சித் தலைவரும், லாருட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹம்ஸா ஸைனுடின், பெர்சத்து கட்சியின் நிறுவனர் ரேட்ஸுவான் யுசோஃப்புக்கு எதிராக 100 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு, 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுத் தர உதவியதாகக் கூறி, பொய்யான அறிக்கைகளை வெளியிட்டுள்ளதாக ரேட்ஸுவான் மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஜனவரி 12 ஆம் தேதி, ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில், Messrs Siddiq Azani & Co என்ற சட்ட நிறுவனம் மூலமாக, ஹம்ஸா இந்த அவதூறு வழக்கைத் தொடுத்துள்ளார்.

அவ்வழக்கில் ரேட்ஸுவான் யுசோஃப்பை ஒரே பிரதிவாதியாக ஹம்ஸா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரேட்ஸுவானின் பொய்யான குற்றச்சாட்டினல், தமக்கு ஏற்பட்ட சேதங்கள், வட்டி மற்றும் செலவுகள் ஆகியவற்றிற்காக 100 மில்லியன் ரிங்கிட்டை இழப்பீடாகக் கோரியுள்ளார்.

மேலும், ரேட்ஸுவான் தனது கண்டனத்திற்குரிய அறிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஹம்ஸா தனது குற்றச்சாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், அவரது மன்னிப்பானது அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளின் கீழ், இணையத்தளங்கள் மற்றும் மலாய் மொழி தினசரி நாளிதழ்களில் வெளியிடப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி, மலாய் நாளிதழ் ஒன்றில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கைகளுக்கு ரேட்ஸுவான் மன்னிப்பு கேட்கத் தவறி விட்டதாகவும் ஹம்ஸா குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கைகள் தவறானவை, தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டவை என்றும், அச்சமயத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும், பெர்சத்துவின் மூத்த உறுப்பினராகவும் இருந்த தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கம் கொண்டவை என்றும் ஹம்ஸா தெரிவித்துள்ளார்.

Related News