புத்ராஜெயா, நவம்பர்.08-
அமைச்சரவை சீரமைப்பு நடைபெறலாம் என்று ஆருடம் கூறப்பட்டு வரும் வேளையில் தொழில்முனைவர்கள், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ எவோன் பெனெடிக் பதவி விலகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று அமைச்சின் பணியாளர்களுடன் சந்திப்பு நடத்திய எவோன் பெனெடிக், இதுநாள் வரையில் தமக்கு ஆதரவு தெரிவித்து வந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
சபா, UPKO ( உப்கோ ) கட்சியின் தலைவரான எவோன் பெனெடிக், தமது பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட விஷயத்தைத் தமது முகநூலில் பகிர்ந்து கொண்டார்.
பெனம்பாங் நாடாளுமன்ற உறுப்பினரான எவோன் பெனெடிக், சபா மாநிலத்தின் வருமானத்தில் 40 விழுக்காட்டுத் தொகையை அந்த மாநிலத்திற்கு வழங்க மறுத்துள்ள மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கை, சட்டவிரோதச் செயலாகும் என்று கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சட்டத்துறை தலைவர் மேல்முறையீடு செய்து இருப்பதை ஆட்சேபிக்கும் வகையில் அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார் என்று கூறப்படுகிறது.








