கோலாலம்பூர், நவம்பர்.12-
அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான கைரி ஜமாலுடின், தமது தலைமையிலான அமைச்சரவையில் இடம் போகிறார் என்று கூறப்படும் ஆருடத்தை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மறுத்தார்.
கைரி ஜமாலுடின் மீண்டும் அமைச்சரவைக்கு வருகிறார் என்று உங்களுக்கு யார் சொன்னது என்று நிருபர்களை நோக்கி அன்வார் கேள்வி எழுப்பினார்.
அடுத்த மாதம் முற்பகுதியில் மேற்கொள்ளப்படவிருக்கும் அமைச்சரவை சீரமைப்பில் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பதவி கைரிக்கு வழங்கப்படலாம் என்று Malaysia Gazette வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் கருத்துரைக்கையில் அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.
தற்போது தோட்டம் மற்றும் மூலத் தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் ஜொஹாரி அப்துல் கானி, முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று அந்த செய்தி இணையத்தளம் கோடி காட்டியிருந்தது.








