கோலாலம்பூர், அக்டோபர்.10-
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் நான்காவது மடானி பட்ஜெட், தேசியக் கடனை அதிகரிக்காமல், மக்களை ஆதரிப்பதில், அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
மக்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து உதவி வழங்கி வருவதை, இந்த பட்ஜெட் கோடிட்டுக் காட்டுகிறது என்றும் அன்வார் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும், முக்கிய டிஜிட்டல் தளங்களிலும் ஒளிபரப்பாகவுள்ள மடானி பட்ஜெட் 2026-ஐ, மலேசியர்கள் அனைவரும் பார்க்கும் படியும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
இன்று மாலை 4 மணிக்கு, 2026 பட்ஜெட்டை பிரதமர் தாக்கல் செய்யவுள்ள நிலையில், இது மடானி அரசாங்கத்தின் தலைமையில் நான்காவது பட்ஜெட்டாகவும், 13வது மலேசியா திட்டத்தின் கீழ் முதல் பட்ஜெட்டாகவும் உள்ளது.