கோத்தா கினபாலு, நவம்பர்.19-
சபா மாநில 17-வது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களின் மனநிலை மற்றும் அரசியல் முதிர்ச்சியைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது என்று பிரதமர் துறை அமைச்சரும், ஜோகூர் பிகேஆர் கட்சித் தலைவருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸாலிஹா முஸ்தஃபா தெரிவித்துள்ளார்.
பொய்யான தகவல்கள் மற்றும் வெற்றுப் பிரச்சாரங்களின் மூலம் எளிதில் மக்களைக் கவர்ந்த காலம் கடந்து விட்டதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் தற்போது தங்களது தொகுதிக்குப் பயனளிக்கும் அம்சங்களையே முக்கியமாகக் கவனிக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சபா வாக்காளர்கள் போட்டியிடும் தரப்புகளிடமிருந்து, நேர்மையையும், பொறுப்புணர்வையும், உண்மையான வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டு வர வேண்டுமென்ற பகுத்தறியும் நிலையை எட்டியுள்ளதாகவும் ஸாலிஹா முஸ்தஃபா தெரிவித்துள்ளார்.
சபா வாக்காளர்களின் மாறி வரும் இந்த மனப்போக்கு, அவர்கள் தற்போது நிலைத்தன்மை, தெளிவான கொள்கைகள் மற்றும் தங்கள் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தக்கூடியவற்றை தான் முன்னுரிமையாகக் கருதுகிறார்கள் என்பதை தெளிவாகக் காட்டுவதாகவும் ஸாலிஹா முஸ்தஃபா தெரிவித்துள்ளார்.








