அலோர் ஸ்டார், செப்டம்பர்.12-
டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலில் உறுப்புக் கட்சிகளாக இணைவதற்கு பாரிசான் நேஷனல் உறுப்புக் கட்சிகள் விண்ணப்பங்கள் சமர்ப்பித்துள்ளதாக பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் இன்று அம்பலப்படுத்தினார்.
அந்தக் கட்சிகளின் விண்ணப்பங்கள் குறித்து பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும் அந்தக் கட்சிகளைத் தோழமைக் கட்சியாக ஏற்றுக் கொள்வது குறித்து இன்னும் எந்தவொரு முடிவு எடுக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
அந்தக் கட்சிகளை உறுப்புக் கட்சிகளாகச் சேர்த்துக் கொள்ளப்படும் வரையில் அக்கட்சிகளின் பெயர்களை வெளியிட முடியாது என்று துவான் இப்ராஹிம் தெரிவித்தார்.
நாட்டின் பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே பாரிசான் நேஷனல் உறுப்புகள் கட்சிகளின் நிலை குறித்து தீர்க்கமாக முடிவு செய்யப்படும் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.