கடந்த 2018-ஆம் ஆண்டில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியைப் பிடித்தபோது வழங்கிய வாக்குறுதிகளில், சில இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் கோவிட்-19 தொற்றும் தான் முக்கியக் காரணங்களாகும். எனினும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் தற்போது நிலையான ஆட்சி அமைந்துள்ளதால், அந்த வாக்குறுதிகள் அனைத்தும் கால அவகாசத்துடன் முன்னுரிமை அடிப்படையில் நிச்சயம் நிறைவேற்றப்படும்,” என ஜசெக தேசியத் தலைவரும் இலக்கவியல் அமைச்சருமான கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பெக்கோக் சட்டமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் ஆசிரியர் டே யோக் ஜியுன்னை ஆதரித்து கம்போங் பாரு சாஆவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கோபிந்த் சிங் உரையாற்றினார்.
கடந்த காலங்களில் 5 ஆண்டுகளில் 4 பிரதமர்கள் மாறிய அரசியல் குழப்பங்கள், 1எம்டிபி நிதி ஊழல் மற்றும் கோவிட்-19 பேரிடரினால் நாடு கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்தது. இதனால் முந்தைய வாக்குறுதிகளை முழுமையாகச் செயல்படுத்துவதில் தேக்கம் ஏற்பட்டது என்று கோபிந்த் சிங் விவரித்தார்.
தற்போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் ஊழலற்ற நல்லாட்சி அமைந்த பிறகு, நாட்டின் மீது உலக நாடுகளுக்குப் பெரும் நம்பிக்கை பிறந்துள்ளது. அதன் வெளிப்பாடாகவே, கடந்த 2025 ஆசியான் மாநாட்டில் உலகத் தலைவர்கள் திரண்டு வந்து மலேசியாவில் முதலீடுகளைச் செய்ய முன்வந்துள்ளனர் என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
இத்தகைய சுபிட்சமான சூழலில், மத்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவோடு பெக்கோக் தொகுதி மக்கள் நன்மைகளைப் பெற, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் வேட்பாளரான ஆசிரியர் டே யோக் ஜியுனைப் பேராதரவோடு வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தினார். இந்நிகழ்வில் ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.








