கிள்ளான், ஜூலை.21-
பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் இடையிலான அரசியல் கூட்டணி விவகாரத்தில் மத்திய தலைமைத்துவம் எடுக்கும் முடிவே சிலாங்கூரிலும் பின்பற்றப்படும் என்றும், எனினும் அந்த முடிவு எதுவாக இருந்தாலும் சிலாங்கூர் மாநில அரசு தொடர்ந்து வலுவாகவும் நிலையாகவும் இருக்கும் என்றும் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு எதிராக அனைத்து 36 தொகுதிகளிலும் பாரிசான் நேஷனல் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் இடையே ஏற்பட்டுள்ள அரசியல் உடன்பாட்டைத் தொடர்ந்து, சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் கூட்டணியை மறுஆய்வு செய்ய வேண்டும் என பிகேஆர் இளைஞர் பிரிவு நேற்று கோரிக்கை விடுத்திருந்தது.
இது குறித்து கிள்ளானில் நடைபெற்ற நிகழ்வொன்றிற்குப் பிறகு கருத்துரைத்த அமிருடின் ஷாரி, சிலாங்கூர் மாநில அரசுக்கு தற்போது பக்காத்தான் ஹராப்பானின் 32 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெரிக்காத்தான் நேஷனலில் இருந்து விலகி ஆதரவளித்து வரும் செலாட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ரஷித் அசாரி என மொத்தம் 33 பேரின் பலம் உள்ளதால், மாநில நிர்வாகத்தின் நிலைத்தன்மைக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என திட்டவட்டமாகக் கூறினார்.








