எதிர்வரும் மலாக்கா மாநிலத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக, எதிரணிக் கட்சி ஒன்றுடன், பாரிசான் நேஷனல் நடத்தி வரும் பேச்சுவார்த்தைகள், கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாக அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.
எனினும், எந்தக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்பதை அவர் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.
மேலும், ஸாஹிட் ஹாமிடி குறிப்பிட்டும் அந்த போட்டி கட்சி, பாஸ் கட்சியா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், பக்காத்தான் ஹராப்பானுடனான ஒத்துழைப்புக்கான வாய்ப்பையும் பாரிசான் நேஷனல் இன்னும் திறந்தே வைத்திருப்பதாக யுனிவெர்சிட்டி தெக்னோலோஜி மாராவில் இன்று நடைபெற்ற இஸ்லாமிய அறிஞர்கள் தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றிய ஸாஹிட் தெரிவித்துள்ளார்.
மேலும், மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான முக்கிய தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்த பின்னர், பாரிசான் எந்தக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் என்பது இறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், கூட்டணி தொடர்பான முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதனிடையே தேர்தல் களத்தில் பாரிசான் நேஷனல் மற்றும் தங்களுடன் ஒத்துழைக்கத் தேர்வு செய்யப்படும் கட்சிகள் இணைந்து செயல்பட்டு நீல அலையை நிச்சயமாக உருவாக்கும் என்றும் ஸாஹிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








