பினாங்கு, நவ. 26-
பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆண்டு தோறும் மாநில அரசாங்கம் ஒதுக்கீடு செய்து வரும் 20 லட்சம் ரிங்கிட் மானியம், 30 லட்சம் ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், மாநில அரசாங்கத்தைக்கேட்டுக்கொண்டார்.
பினாங்கு மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசாங்கம் மொத்தம் 20 லட்சம் ரிங்கிட் மானியத்தை ஒதுக்கீடு செய்து வருகிறது.
மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் கற்றல், கற்பித்தல் தரத்தை உயர்த்தும் அதேவேளையில் பள்ளிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதற்கு இந்த நிதி போதுமானதாக இல்லை. இன்னமும் அதிகமான தமிழ்ப்பள்ளிகள் சீர்படுத்தப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில் உயர்தரமான மனித மூலத்தனத்தை உருவாக்குவதற்கு ஸ்டெம் கல்வி போன்றவற்றை பயில்வதற்கு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் பொருத்தமான கல்வி சூழலை ஏற்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு அவசியமாகிறது என்று பினாங்கு சட்டமன்றத்தில் குமரன் கிருஷ்ணன் இன்று வலியுறுத்தினார்..
முதலமைச்சர் சோவ் கோன் இயோ தலைமையிலான பினாங்கு அரசு கல்விக்கு அதீத முக்கியத்துவம் அளித்து வரும் அரசாங்கமாக போற்றப்பட்டு வருவதால் பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு மாதத்திற்கு கிட்டத்தட்ட தலா 10 ஆயிரம் ரிங்கிட் மானிய ஒதுக்கீடு என்ற அளவில் 30 லட்சம் ரிங்கிட் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று குமரன் கிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.








