சிரம்பான், டிசம்பர்.06-
அடுத்த வாரத்தில் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக விவாதிப்பதற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜசெக-வை இன்னும் அழைக்கவில்லை என்று அதன் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
அமைச்சரவை மாற்றம் தொடர்பாக முடிவெடுப்பது என்பது பிரதமரின் முழு உரிமை மற்றும் அதிகாரத்திற்கு உட்பட்டது என்ற போதிலும் அதற்கு முன்னதாக பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களுடன் அது குறித்து விவாதிப்பது மரபாகும் என்று போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
இவ்வாறு உறுப்புக் கட்சிகளை அழைத்து விவாதிக்கப்படும் போது ஒவ்வொரு கட்சியும் தனது கருத்தையும், நிலைப்பாட்டையும் நேரடியாக பிரதமரிடம் கூற வாய்ப்பு உள்ளது என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை சிரம்பான், Transit Seremban Sentral- லில் கட்டுமானத் திட்டத்திற்கான பூமி வேலையைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினரான அந்தோணி லோக் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.








