கோலாலம்பூர், டிசம்பர்.30-
பெரிகாத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் இன்று காலை பதவி விலகியதையடுத்து, ஜோகூர், பேராக், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களும் தங்களது பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
அக்கூட்டணியில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் உயர்மட்டத் தலைவர்களின் பதவி விலகலானது, அங்கு நிலவி வரும் கடுமையான விரிசல்களை அம்பலப்படுத்தியுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தீவிரமடைந்து வரும் இந்த அரசியல் நெருக்கடியானது, பெரிகாத்தான் கூட்டணியின் எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கியுள்ளது.
இன்று பிற்பகல் 3.15 மணியளவில், பேராக் மாநில பெரிகாத்தான் தலைவர் அஹ்மாட் ஃபைஸால் அஸுமுவும், நெகிரி செம்பிலான் மாநில பெரிகாத்தான் தலைவர் முஹமட் ஹானிஃபா அபு பாகெரும் தங்களது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.
வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தங்களது பதவி விலகலானது அமலுக்கு வருவதாகவும் தங்களது முகநூலில் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, பெரிகாத்தான் தேசிய பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ முஹமட் அஸ்மின் அலி, பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.








