கோலாலம்பூர், நவ. 26-
சர்ச்சைக்குரிய அரசியல்வாதியும் பேரா, பாசீர் சலாக் அம்னோ டிவிஷனின் முன்னாள் தலைவருமான தஜுடின் அப்துல் ரஹ்மானுக்கு விதிக்கப்பட்டிருந்த 6 ஆண்டு இடை நீக்கத் தடையை அம்னோ உச்சமன்றம் நேற்று அகற்றியது.
எல்ஆர்டி ரயில் சேவையை வழிநடத்தி வரும் பிரசரன்னா நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான தஜுடின் அப்துல் ரஹ்மான், இடை நீக்கம் அகற்றப்பட்டு, அவரின் உறுப்பினர் தகுதி, உடனடியாக அமலுக்கு வருவதாக அம்னோ உச்சமன்றம் முடிவு செய்துள்ளது என்று கட்சியின் பொதுச் செயலாளர் அஷ்ராப் வாஜ்டி டுசுக்கி தெரிவித்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியின் தலைமைத்துவத்தை கடுமையாக விமர்ச்சித்து அ றிக்கை வெளியிட்டதற்காக கட்சியிலிருந்து தஜுடின் 6 ஆண்டு காலத்திற்கு இடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஜாஹிட் ஹமிடியின் தலைமைத்துவத்திற்கு எதிராக செயல்பட்ட அம்னோ முன்னாள் உதவித் தலைவர் ஹிஷாமுடின் துன் ஹுசேன் உட்பட கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட ஐந்து முக்கிய தலைவர்களில் தஜுடினும் ஒருவர் ஆவார்.
டான்ஸ்ரீ முகைதீன் யாசின் நாட்டின் பிரதமராக இருந்த போது, பிரசாரன்னா தலைவராக பதவி வகித்த தஜுடின், கோலாலம்பூர், கேஎல்சிசி- க்கும், கம்போங் பாருவிற்கு இடையில் இரண்டு எல்.ஆர்.டி. ரயில்கள் மோதிக்கொண்டு, 47 பயணிகள் கடும் காயத்திற்கு ஆளான விபத்தை, இரண்டு ரயில்கள் முத்தமிட்டுக்கொண்டன என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் கிண்டலாக வர்ணித்ததற்காக அவர், அந்த ரயில் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.








