கோத்தா கினபாலு, நவம்பர்.22-
வரும் 29 ஆம் தேதி நடைபெறவிருக்கு சபா சட்டமன்றத் தேர்தலையொட்டி பாரிசான் நேஷனல் இன்று தனது தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வெற்றி பெற்று, ஆட்சியை அமைக்குமானால் மக்கள் வாங்கத்தக்க விலை கட்டுப்படியான வீடுகள் கட்டப்படும் என்பதுடன் வாழ்க்கைச் செலவினங்களுக்கான உதவிகள் நல்கப்படும் என்று அக்கூட்டணி, தனது தேர்தல் கொள்கை அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.
சபா மக்களைக் கவரும் வகையில் ஆறு முக்கிய அம்சங்களைத் தாங்கிய தேர்தல் கொள்கை அறிக்கையை மாநில தேசிய முன்னணியின் பொருளாளர் சாலே சையிட் கெருவாக் வெளியிட்டார்.
சபா மாநில தண்ணீர் கட்டணம் மறு சீரமைக்கப்படுவது, மக்களின் நல்வாழ்வு, பொருளாதார உயர்வு, மகளிர் மற்றும் இளையோர்களுக்கானச் சலுகைகள், தரமான உயர்க்கல்வி, அரசியல் உருமாற்றம் ஆகியவற்றை பாரிசான் நேஷனல் தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.
சபாவில் வீட்டுப் பிரச்னை தலைத்தூக்கியிருப்பதால் வாங்கத்தக்க விலை கட்டுப்படியான வீடுகளை நிர்மாணிப்பதில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று சாலே சையிட் கெருவாக் தெரிவித்தார்.
ஆண்டுக்கு 15 ஆயிரம் வீடுகளைக் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்ட நிலையில் புதிய விமான நிலையம் நிர்மாணிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.








