நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பாரிசான் நேசனல் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட முதலீட்டு இலக்குகளை விட மாநில அரசின் தற்போதைய சாதனைகள் மிக அதிகமாக உள்ளதாக அம்மாநிலத்தின் மெந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருன் தெரிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகளில் 30 பில்லியன் ரிங்கிட் முதலீட்டை ஈர்ப்பதாகக் கூறிய எதிர்க்கட்சியினரின் திறனை அவர் கடுமையாகச் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநில அரசு கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் 19.1 பில்லியன் ரிங்கிட் முதலீட்டைப் பதிவு செய்துள்ளதாகவும், நடப்பாண்டின் முதல் பாதியில் கூடுதலாக 13 பில்லியன் ரிங்கிட் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஐந்தாண்டுகளுக்கு அவர்கள் அளித்த வாக்குறுதியை தற்போதைய அரசாங்கம் குறுகிய காலத்திற்குள் சாதித்துக் காட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஏர் குனிங் பகுதியில் நடைபெற்ற இந்திய சமூகத்தினருக்கான சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், வெறும் தேர்தல் அறிக்கைகளை நம்பாமல் திட்டங்களையும் அதன் உண்மையான பலன்களையும் மக்களே நேரில் பார்த்துத் தீர்மானிக்க வேண்டும் என்றார். மேலும், இயற்கை வளம் மற்றும் உள்ளூர் பாரம்பரியம் பாதிக்கப்படாமல் கோலா பிலா மற்றும் ஜெலேபு போன்ற பகுதிகளில் சுற்றுலாத்துறை மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.








