கோலாலம்பூர், ஜனவரி.04-
பெர்லிஸ் முதல்வருக்கு எதிராகக் கலகம் செய்த 3 பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் உறுப்பினர் தகுதி பறிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மேல்முறையீடு செய்யச் சட்டப்படி வழியே இல்லை என பாஸ் தலைமை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது! கட்சியின் விதிகளின்படி, மக்கள் பிரதிநிதிகள் கட்சிக்குத் துரோகம் இழைத்தால் அவர்களது உறுப்பினர் தகுதி தானாகவே நீக்கப்படும் என்றும், இதில் மன்னிப்புக்கோ அல்லது மேல்முறையீட்டிற்கோ இடமில்லை என்றும் கட்சியின் சட்டப் பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது.
சூப்பிங் சட்டமன்ற உறுப்பினர் சாஆட் செமான், பிந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஃபக்ருல் அன்வார் இஸ்மாயில், குவார் சட்டமன்ற உறுப்பினர் சஞ்சி முஹமட் ரிட் ஸுவான் ஹாஷிம் ஆகிய மூவரும் மீண்டும் கட்சியில் இணைய விரும்பினால், பழையதை மறந்து விட்டு புதிய உறுப்பினர்களாக விண்ணப்பிக்க மட்டுமே முடியும் என அக்கட்சி தெரிவித்துள்ளது. "நாங்கள் முறையாகவே மேல்முறையீடு செய்வோம்" என அந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களும் பிடிவாதம் பிடித்தாலும், கட்சியின் “Majlis Syura Ulama" அமைப்பிற்கு இதில் தலையிட அதிகாரம் இல்லை என பாஸ் முட்டுக் கட்டைப் போட்டுள்ளதால் பெர்லிஸ் அரசியலில் பெரும் பதற்றம் நிலவுகிறது.








