கோலாலம்பூர், அக்டோபர்.10-
2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மாலை 4 மணியளவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
2026 ஆம் ஆண்டு பட்ஜெட், 47 ஆயிரம் கோடி ரிங்கிட் அல்லது 470 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பட்ஜெட்டாகும்.
கடந்த 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் மதிப்புடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும். கடந்த பட்ஜெட்டில் 42 ஆயிரத்து 100 கோடி ரிங்கிட் அல்லது 421 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பட்ஜெட்டை நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் அறிவித்தார்.
கடந்த 2022 ஆண்டில் நாட்டின் பிரதமராக மடானி அரசாங்கத்திற்குப் பொறுப்பேற்ற டத்தோ ஶ்ரீ அன்வார், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 4ஆவது பட்ஜெட் இதுவாகும்.
பொருளாதாரத்திற்கு புத்துணர்ச்சியூட்டுதல், உருமாற்றத்திற்கான மாற்றங்களைத் தூண்டுதல் மற்றும் ஒட்டுமொத்த மக்களின் நலனை மேம்படுத்துதல் ஆகியவற்றை 2026 ஆம் ஆண்டு பட்ஜெட் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மடானி பொருளாதார கட்டமைப்பின் கீழ் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்து, வளர்ச்சித் திட்டங்களுக்கு உந்துதல் அளித்து, மக்களின் நலனைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை பிரதமர் 2026 ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் வலியுறுத்தியுள்ளார்.