கங்கார், டிசம்பர்.26-
பாஸ் கட்சியிலிருந்து மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து, நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் பயன்படுத்தி வந்த அரசாங்க சொத்துகள் அனைத்தையும் திரும்ப ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த சொத்துக்களை அவர்கள், காலதாமதமின்றி ஒப்படைக்க வேண்டும் என்றும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களின் பட்டியல், பெர்லிஸ் மாநில சட்டமன்றத்திற்கு தெரிவிக்கப்படும் என்றும் அம்மாநில சபாநாயகர் Rus’sele Eizan தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், பெர்லிஸ் மாநில நடப்பு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை உறுதிச் செய்ய, காலியான அந்த மூன்று சட்டமன்ற இடங்களும் விரைவில் நிரப்ப வேண்டும் என்றும் Rus’sele Eizan குறிப்பிட்டுள்ளார்.
எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த மூன்று சட்டமன்ற காலியிடங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அறிவித்து, இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் Rus’sele Eizan தெரிவித்துள்ளார்.
சூப்பிங் சட்டமன்ற உறுப்பினர் சாஅட் செமான், பிந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஃபாக்ருல் அன்வார் இஸ்மாயில், குவார் சஞ்சி சட்டமன்ற உறுப்பினர் முகமட் ரிட்ஸுவான் ஹாஷிம் ஆகிய மூவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்வதாக பாஸ் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் நேற்று அறிவித்தார்.
அண்மையில், பெர்லிஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர், பெர்லிஸ் ராஜா துவாங்கு சையிட் சிராஜுடின் புத்ரா ஜமாலுலாயிலைச் சந்தித்து, மாநில மந்திரி பெசார் முகமட் ஷுக்ரி ரம்லிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைத்து, அவருக்கு தாங்கள் வழங்கி வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாகவே, பாஸ் கட்சி தனது மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியதாக நம்பப்படுகின்றது.








