கோத்தா கினபாலு, நவம்பர்.19-
சபா மாநிலத்தின் 17 ஆவது சட்டமன்றத் தேர்தலில் 73 தொகுதிகளிலும், அங்குள்ள தகுதியான வாக்காளர்களுக்கு மொத்தம் 22,881 அஞ்சல் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் பணியாளர்கள், தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள், போலீஸ், ஆயுதப்படை வீரர்கள் மற்றும் ஊடகவியலாலர்களுக்கு, 1A வகையின் கீழ், மொத்தம் 21,362 வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டதாக தேர்தல் ஆணையச் செயலாளர் டத்தோ கைருல் ஷாரில் இட்ருஸ் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியக் குடிமக்களுக்கு, 1B வகையின் கீழ் 336 வாக்குச் சீட்டுகளும், முகவர்கள் மற்றும் அமைப்புகளுக்கு 1C வகையின் கீழ் 1,183 வாக்குச் சீட்டுகளும் வழங்கப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் கைருல் ஷாரில் இட்ருஸ் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக, அந்தந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில், சம்பந்தப்பட்ட முகவர்களிடம் அஞ்சல் வாக்குச் சீட்டுகள் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








