கோலாலம்பூர், அக்டோபர்.30-
அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான கைரி ஜமாலுடின், மீண்டும் தாய்க் கட்சிக்குத் திரும்பலாம் என்று ஆருடம் வலுத்து வருகிறது.
வரும் நவம்பர் மாதம் 29 ஆம் தேதி நடைபெறவிருக்கு சபா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே அவர் மீண்டும் அம்னோவில் இணையலாம் என்று கூறப்படுகிறது.
இதன் தொடர்பில் அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடியும், கைரியும் சந்திப்பு நடத்தியதாகப் பரபரப்பாகப் பேசப்பட்டாலும், இது குறித்து உறுதிப்படுத்தும் தகவல் இல்லை.
கடந்த 2022 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணனை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்விக் கண்ட கைரி, பின்னர் கட்சியின் தலைவர் ஸாஹிட் ஹமிடியைக் கடுமையாகக் கூறைக் கூறி விமர்சனம் செய்து வந்ததைத் தொடர்ந்து அவர் அம்னோவிலிருந்து நீக்கப்பட்டார்.
நடைபெறவிருக்கும் சபா சட்டமன்றத் தேர்தலில் பாரிசாான் நேஷனல் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிச் செய்வதற்கு கைரியைக் களம் இறக்கும் நோக்கிலேயே அவர் மீண்டும் அம்னோவிற்குத் திரும்ப வேண்டும் என்ற பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும் முன்னாள் பிரதமரும், தமது மாமனாருமான துன் அப்துல்லா அஹ்மாட் படாவி முன்பு போட்டியிட்டு வெற்றி பெற்ற பினாங்கு, கெப்பாளா பாத்தாஸ் நாடாளுமன்றத் தொகுதியில் கைரியை அடுத்த பொதுத் தேர்தலில் களம் இறக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.








