ஈப்போ, நவம்பர்.09
மக்களின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டிய நாட்டின் வளங்களும், ஆற்றலும் முடிவில்லா அரசியல் சண்டைகளில் வீணடிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று பேரா மாநில ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின் ஷா கடுமையாக வலியுறுத்தியுள்ளார். இத்தகைய எதிர்மறை அரசியல் போக்குகள் மனித உறவுகளின் நல்லிணக்கத்தைக் கெடுக்கும் என்றும், இன மற்றும் மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
எனவே, நாட்டின் நிலைத்தன்மையைக் காக்கும் பொருட்டு, அறிவை விவேகத்துடன் பயன்படுத்த வேண்டும் என்றும், உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். மேலும், இறைவன் அளித்துள்ள பல்வகைமையை ஒரு விலைமதிப்பற்றச் சொத்தாகக் கருதி, வேற்றுமைகளை நல்லிணக்கத்துடன் ஏற்று, ஏழை எளிய மக்களின் துயர்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுல்தான் நஸ்ரின் கேட்டுக் கொண்டார்.








