ஷா ஆலாம், ஜனவரி.18-
சிலாங்கூர் மாநில டிஏபி பேராளர் மாநாட்டில், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளில் 31 விழுக்காடு பெண்களுக்கும் 24 விழுக்காடு இளைஞர்களுக்கும் வாய்ப்பளித்து அக்கட்சி புதிய சாதனை படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலினச் சமத்துவத்தைப் பேணுவதோடு, அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்கும் நோக்கில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் முன்னுரிமை அளிப்பது கட்சியின் அடிப்படைக் கொள்கையாக முன்னெடுக்கப்படுகிறது.
குடியிருப்பாளர்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்கும் முக்கியப் பொறுப்பான இந்தக் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதில், மலேசியாவின் மற்ற அரசியல் கட்சிகளை விட டிஏபி முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நியமிக்கப்படும் இந்த மக்கள் நிகராள்கள், அடித்தட்டு மக்களின் தேவைகளை நேரடியாக நிறைவு செய்ய முக்கியப் பாலமாகச் செயல்படுகின்றனர்.








