கோலாலம்பூர், அக்டோபர்.23-
மலேசியாவில் தற்போதைய நிலைமையைப் பாலஸ்தீனத்துடன் ஒப்பிட்டுப் பேசியிருப்பதாகக் கூறப்படும் பெங்காலான் செப்பா எம்.பி. அஹ்மாட் மார்ஸுக் ஷாரி பேச்சு குறித்து பெரிக்காத்தான் நேஷனலில் உள்ள இந்தியத் தலைவர்கள் வாயைத் திறக்காது ஏன் என்று ஜெலுத்தோங் எம்.பி. ஆர்எஸ்என் ராயர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராயர், பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்த கட்சித் தலைவர்களான மலேசிய முன்னேற்றக் கட்சி தலைவர் பி. வேதமூர்த்தி, மலேசிய இந்திய மக்கள் கட்சித் தலைவர் P. புனிதன் மற்றும் உரிமைக் கட்சியின் தலைவர் டாக்டர் பி. ராமசாமி ஆகியோரை இலக்காகக் கொண்டு ராயர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
பாலஸ்தீனம் மோதல்களாலும் இரத்தக்களரியாலும் சூழப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். இங்கே, மலேசியாவில் நாங்கள் தீபாவளியை அமைதியாகவும் நல்லிணக்கமாகவும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். அனைத்து இனங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் இந்தியர்களின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டு மகிழ்கின்றனர்.
இந்நிலையில் வேதமூர்த்தி, பி. புனிதன் மற்றும் டாக்டர் பி. ராமசாமி போன்றோர் உஸ்தாஸ் அஹ்மாட் மார்ஸுக்கின் அறிக்கைக்கு இன்னமும் வாய் திறக்காமல் மவுனம் காப்பது ஏன் என்று ராயர் வினவினார்.
கடந்த திங்கட்கிழமை கிளந்தானில் பேசிய அஹ்மாட் மார்ஸுக், மலேசிய முஸ்லீம்கள், பாலஸ்தீன வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், அதே போன்ற நிகழ்வுகள் மலேசியாவிலும் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தற்போது தென்படுகின்றன என்று தனது முகநூலில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதற்கு கடந்த செவ்வாய்க்கிழமை பதிலடி கொடுத்த ஜசெக உதவித் தலைவர் ஷாரெட்ஸான் ஜொஹான், பாஸ் எம்.பி. அஹ்மாட் மார்ஸுக்கின் வாதம், முஸ்லிம் அல்லாதவர்களையும் பூமிபுத்ரா அல்லாத மலேசியர்களையும் மலாய்-முஸ்லிம்களின் நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது போல் தவறாகச் சித்தரித்துள்ளார் என்று கூறினார்.
மலாய்க்காரர் அல்லாதவர்களையும் முஸ்லிம் அல்லாதவர்களையும் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் அநீதியான நடவடிக்கைகளுடன் அஹ்மாட் மார்ஸுக் ஒப்பிட்டுப் பேசியதை கடுமையாகக் கண்டித்து இருப்பதையும் ராயர் சுட்டிக் காட்டினார்.