கோலாலம்பூர், ஜனவரி.16-
கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வரும் அம்னோ பொதுப்பேரவையில், நேற்று அக்கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் முஹமட் அக்மால் சாலே, மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக அறிவித்தார்.
மலாக்கா மாநில கிராமப்புற மேம்பாடு, வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை ஆட்சிக் குழு உறுப்பினராகப் பதவி வகித்து வந்த அக்மால், அடுத்த வாரம் முதல் தமது பதவி விலகல் அமலுக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவராக தான் தொடர்ந்து பதவி வகிக்கப் போவதாகவும், அம்னோவின் அடிமட்ட தொண்டர்களுக்காக சேவையாற்றப் போவதாகவும் அக்மால் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அக்மாலின் பதவி விலகலுக்குத் தாம் மதிப்பளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி, அவர் வெளியிட்ட மோதலான கருத்துகள் குறித்து தனிப்பட்ட முறையில் விளக்கமளிக்க வேண்டுகிறார்.
ஜசெகவை முடிவுக்குக் கொண்டு வர போராடுவோம் என்ற பிரச்சாரத்துடன் பதவி விலகியிருக்கும் அக்மால், இந்த விவகாரத்தில் யாரைத் தாக்குகிறார்? என்று தனக்குத் தெரிய வேண்டும் என்றும் ஸாஹிட் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அம்னோ, பாஸ் மற்றும் பிற இஸ்லாமிய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து உறுதியான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என்று அக்மால் தனது கொள்கை உரையில் குறிப்பிட்டிருந்தார்.
அது அக்மாலின் பரிந்துரை மட்டுமே என்று குறிப்பிட்டுள்ள ஸாஹிட், அம்னோ தலைமைத்துவம் மட்டுமே அம்முடிவை எடுக்க இயலும் என்றும் தெரிவித்துள்ளார்.
அக்மால் இந்த பரிந்துரையை அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் போது தெரிவிக்க வேண்டும் என்றும் ஸாஹிட் வலியுறுத்தியுள்ளார்.








