அரசியல் ஆதாயத்துக்காக ஜசெக ஒருபோதும் முதுகில் குத்தும் வேலையில் ஈடுபடாது என்றும், அரசியலமைப்புக்கு உட்பட்ட மன்னராட்சி கொள்கையை எப்போதும் நிலைநிறுத்தும் என்றும் அதன் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி தொடர்பில் பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மாட் ஃபாட்லி ஷாரி, உண்மையான விவகாரத்தைத் திசைதிருப்புவதாக அந்தோணி லோக் குற்றஞ்சாட்டினார்.
10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் முன்னிலையில் விசுவாச உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின்னர், செப்டம்பர் 16ஆம் தேதி அவரைப் பதவி நீக்கும் பிரகடனத்தை அங்கீகரித்ததே முக்கியப் பிரச்சினை என்றார்.
“துவாங்குவின் நிலையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், மாநில அரசை அமைக்க அவரின் முன்னிலையில் ஏன் விசுவாச உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்?” என்று அந்தோணி லோக் கேள்வி எழுப்பினார்.
வேறு மாநிலத்தில் இதே போன்ற முறையில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஆட்சியாளரால் நீக்கப்பட்டால் அதை ஏற்றுக் கொள்வாரா என அஹ்மாட் ஃபாட்லி கேள்வி எழுப்பியிருந்த நிலையில், ஜசெக இது போன்ற செயலை எந்தச் சூழ்நிலையிலும் செய்யாது என்றும், அரசியலமைப்புக்கு உட்பட்ட மன்னராட்சி கொள்கையை எப்போதும் நிலைநிறுத்தும் என்றும் அந்தோணி லோக் கூறினார்.








