கோத்தா கினபாலு, ஜனவரி.22-
மஇகா கட்சியானது இன்னும் பாரிசான் நேஷனல் கூட்டணியில் உள்ளதாக பாரிசான் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஸாம்ரி அப்துல் காடீர் தெரிவித்துள்ளார்.
கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து மஇகா தரப்பிலிருந்து, பாரிசனுக்கு எந்த ஒரு அதிகாரப்பூர்வக் கடிதமும் அனுப்பப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ள ஸாம்ரி, கூட்டணியில் இருந்து மஇகா விலகி விட்டதாகக் கூறும் செய்திகளில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை, மக்கள் முற்போக்குக் கட்சியான PPP-ஐ, மீண்டும் பாரிசான் கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைக்கும் உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த ஸாம்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதே வேளையில், உச்சமன்ற கூட்டத்தில் மஇகா தலைவர்கள் கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஸாம்ரி, உச்ச மன்ற கூட்டமானது குறைந்த கால அவகாசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதால் மஇகாவின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கவில்லை என்று தெரிவித்தார்.
முன்னதாக, பாரிசான் கூட்டணியில் இருந்து மஇகா விலகி விட்டதாகவும், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.








