நவ. 24-
மலிவு விலை வீடுகளைக் கட்டத் தவறிய மூன்று கட்டுமான நிறுவனங்களுக்கு ஜோகூர் மாநில அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கையானது, குறிப்பிட்ட அந்த நிறுவனங்கள் கட்டிய பிற சொத்துக்களை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் மாநில அரசின் வீட்டுவசதி, ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர், டத்தோ Mohd Jafni Md Shukor இந்த நடவடிக்கையை விளக்கியுள்ளார். அவர் கூறுகையில், அக்கட்டுமான நிறுவனங்கள், மலிவு விலை வீடுகளை கட்ட வேண்டும் என்ற அரசின் கட்டளையை மீறியதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட அந்த மூன்று நிறுவனங்களும் கட்டிய அனைத்து சொத்துக்களின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை, அவர்கள் மலிவு விலை வீடுகளை கட்டி முடிக்கும் வரை நீடிக்கும் என்று Mohd Jafni தெரிவித்தார்.
ஜோகூர் மாநிலத்தில் மலிவு விலை வீடுகளை கட்ட வேண்டும் என்ற அரசின் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை என்று அவர் கூறினார்.
ஜோகூர் மாநில அரசாங்கம், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து கட்டுமான நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில், 100 கட்டுமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவற்றில் பாதி நிறுவனங்கள், இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு மலிவு விலை வீடுகளை கட்ட ஒப்புக்கொண்டுள்ளன என்றார் அவர்.








