கோலாலம்பூர், டிசம்பர்.01-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிக்கவிருக்கும் சிறிய அளவிலான அமைச்சரவை மாற்றத்தில் தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன், முழு அமைச்சர் ஆகலாம் என்று ஆருடம் கூறப்பட்டுள்ளது.
டத்தோ ஶ்ரீ ரமணன் துணை அமைச்சராக பதவி வகித்து வரும் தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறையின் அமைச்சர் பதவியை வகித்து வந்த சபா UPKO கட்சித் தலைவரான டத்தோ எவோன் பெனடிக், கடந்த நவம்பர் 10 ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்தப் பதவி இன்னமும் காலியாக உள்ளது.
இந்நிலையில் தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சுக்கு தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தி வரும் 44 வயது டத்தோ ஶ்ரீ ரமணன், அமைச்சராக பதவி உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த மே மாதம் நடைபெற்ற பிகேஆர் கட்சித் தேர்தலில் மூன்றாவது உதவித் தலைவராக ரமணன் தேர்வு செய்யப்பட்டார். முதலாவது உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி, சிலாங்கூர் மந்திரி பெசாராகப் பதவி வகித்து வருகிறார்.
இரண்டாவது உதவித் தலைவரான டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹாருன், நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசாராகப் பதவியேற்றுள்ளார். நான்காவது உதவித் தலைவரான சாங் லி காங், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் மூன்றாவது உதவித் தலைவர் ஒருவர் துணை அமைச்சராக இருப்பது, ரமணன் மட்டுமே என்பதால் பிரதமர் அறிவிக்கவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் டத்தோ ஶ்ரீ ரமணன், காலியாக இருந்து வரும் தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவிக்கு உயர்த்தப்படலாம் என்று ஆருடம் கூறப்பட்டுள்ளது.








