Jul 22, 2026
Thisaigal NewsYouTube
திட்டங்கள் தொடர பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி நீடிக்க வேண்டும்: ஜே. அருள்குமார் வலியுறுத்தல்
அரசியல்

திட்டங்கள் தொடர பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி நீடிக்க வேண்டும்: ஜே. அருள்குமார் வலியுறுத்தல்

Share:

ஒரு மாநிலம் சிறப்பாகச் செயல்பட வேண்டுமானால் அதன் மேம்பாட்டுத் திட்டங்கள் திட்டமிட்டபடி தடையின்றி நடைபெற வேண்டும் என்றும், அதனால்தான் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி தொடர வேண்டியது அவசியம் என்றும் நீலாய் தொகுதி வேட்பாளரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜே. அருள்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று நான்கு ஆண்டு காலமாக பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் இத்தகைய திட்டமிட்ட வளர்ச்சிப் பாதையில்தான் பயணித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

செயல்திட்டங்களைச் சரியாக அமல்படுத்தத் தவறினால், அதன் நேரடிப் பாதிப்பை மக்களே எதிர்கொள்ள நேரிடும் என்பதை மாநில அரசாங்கம் நன்கு உணர்ந்து, பொறுப்புடன் செயல்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் புவியியல் ரீதியான சிறப்புகள் குறித்துப் பேசிய அருள்குமார், "நமது மாநிலம் மிகச் சிறந்த வியூக அமைவிடத்தைக் கொண்டுள்ளது. மலாக்கா நீரிணையையொட்டிய துறைமுக வசதி, அருகில் உள்ள பன்னாட்டு விமான நிலையம் மற்றும் ஒரு மணி நேரத்திற்குள் நாட்டின் தலைநகரைச் சென்றடையக்கூடிய போக்குவரத்து வசதிகள் எனப் பல சாதகமான அம்சங்கள் இங்கு உள்ளன என்று அருள்குமார் விவரித்தார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் புவியியல் பலத்தையும், கடந்த கால திட்டமிட்ட நிர்வாகத் திறனையும் கொண்டு, மாநிலத்தை அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்ல பக்காத்தான் ஹராப்பானின் நிலையான ஆட்சி அவசியம். முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் மாநில அரசாங்கத்தை மக்கள் நிலைநிறுத்த வேண்டும் என்று அருள்குமார் வலியுறுத்தினார்.

Related News

திட்டங்கள் தொடர பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி நீடிக்க வேண்ட... | Thisaigal News