கோலாலம்பூர், ஜனவரி.05-
ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேற வேண்டும் என்று அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அக்மால் சாலே விடுத்து வரும் கோரிக்கையை ஜசெக.வின் இளைஞர் அணியான DAPSY, ஒரு "அரசியல் நகைச்சுவை" என்று வர்ணித்துள்ளது.
கடந்த மூன்று நாட்களாக அக்மால் சாலே இக்கோரிக்கையை விடுத்து வந்தாலும், அம்னோவின் உயர்மட்டத் தலைவர்கள் எவரும் இதற்குச் செவிசாய்க்கவில்லை என்று சுட்டிக் காட்டியுள்ள DAPSY தலைவர் வூ கா லியோங், 2023 அம்னோ பொதுப் பேரவை முடிவின்படி, நடப்பு அரசாங்கத்திற்கு அம்னோவின் ஆதரவு இந்த தவணை முடியும் வரை தொடரும் என்பதை நினைவூட்டினார்.
ஊழலுக்கு எதிரான சீர்திருத்தக் கொள்கைகளில் உடன்பாடு இல்லாதவர்கள், அரசாங்கத்திலிருந்து வெளியேற யாரிடமும் அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை என்றும், அவர்கள் உடனடியாக வெளியேறி காஜாங் சிறையில் உள்ள தங்கள் தலைவரான டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்குடன் இணைந்து கொள்ளலாம் என்றும் DAPSY தலைவர் வூ கா லியோங், இன்று மிகக் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், 2020-இல் அம்னோ, பெர்சத்து மற்றும் பாஸ் ஆகிய கட்சிகள் இணைந்து அமைத்த ஆட்சி, நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும் அரசியல் நிலைத்தன்மைக்குமே வழிவகுத்தது என்பதையும் வூ கா லியோங் சுட்டிக் காட்டினார்.
கடந்த பொதுத்தேர்தலில் அம்னோவின் பாரம்பரியத் தொகுதிகளைப் பறித்த பாஸ் கட்சியானது, அம்னோவிற்கு ஒரு போட்டியாளர் என்பதைத் தாண்டி நாட்டின் நிர்வாகத்திற்கு ஒரு சுமையாகும் என்று வூ கா லியோங் விமர்சித்துள்ளார்.
அக்மால் சாலே இன்னும் பாஸ் கட்சியின் மீது நம்பிக்கை கொண்டிருப்பது ஒரு கற்பனையே தவிர வேறில்லை என்றும், பாஸ் கட்சி தனது செல்வாக்கை வளர்த்துக் கொள்ள அம்னோவை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறது என்றும் DAPSY சார்பில் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் வூ கா லியோங் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கிளந்தான், திரெங்கானு, கெடா மற்றும் பெர்லிஸ் மாநிலங்களைப் போல மதவாத மற்றும் இனவாத அரசியலை மக்கள் விரும்பவில்லை என்றும், மாறாக, பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அரசாங்கத்தையே அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் DAPSY வலியுறுத்தியுள்ளது.
எனவே, இத்தகைய அரசியல் நாடகங்களை நிறுத்தி விட்டு, ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் மக்கள் நலன் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளில் அனைத்துக் கட்சிகளும் கவனம் செலுத்த வேண்டும் என்று DAPSY அழைப்பு விடுப்பதாக வூ கா லியோங் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








