கோலாலம்பூர், அக்டோபர்.25-
வரும் பொதுத் தேர்தலில் தொகுதிகளில் மும்முனைப் போட்டி ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு பெரிக்காத்தான் நேஷனலுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுவது தொடர்பில் மலேசிய சோஷலிச கட்சியான பிஎஸ்எம், தனது உயர்மட்டத் தலைவர்களுடன் விவாதிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் தெரிவித்துள்ளார்.
விரைவில் நடைபெறவிருக்கும் பிஎஸ்எம் கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்தில் இந்த உத்தேசப் பரிந்துரை குறித்து மிக ஆழமாக விவாதிக்கப்படும் என்று மைக்கல் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி என்ற முறையில் பிஎஸ்எம், மற்ற எதிர்க்கட்சிகளுடன் ஒரே தொகுதியில் போட்டியிடுவதைத் தவிர்க்க விரும்புகிறது.
எனினும் பிஎஸ்எம், இன மற்றும் மத அடிப்படையிலான அரசியலுக்கு முரண்பட்டது என்பதில் கட்சி உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டு இருப்பதாக அவர் விளக்கினார்.








