கோத்தா கினபாலு, நவம்பர்.20-
வரும் 29 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சபா சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கக்கூடிய ஆளுமை நிறைந்த ஒரு தலைமைத்துவத்தை மாநில வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சபா தேர்தல் முடிவுகள், மக்களுக்கு முழுமையான மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பது சபா மக்களின் மிகுந்த நம்பிக்கையாகும்.
முன்னேற்றத்தையும், சமூகவியல் நல்வாழ்வையும் அனுபவிக்க வேண்டும் என்பது சபா மக்களின் விருப்பமாக உள்ளது. குறிப்பாக நல்வாழ்வு, பாதுகாப்பு மற்றும் வாழ்க்கையின் நிலைத்தன்மை, உள்கட்டமைப்பு அடிப்படையில் அந்த முன்னேற்றம் இருக்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாகும்.
இப்போது இருப்பதை விட மிகச் சிறந்த மாற்றங்களைச் செயல்படுத்தக்கூடிய ஓர் அரசாங்கத்தை தாங்கள் எதிர்பார்ப்பதாக இளைய தலைமுறையான மாணவி எமிலியா சிடின் கூறினார்.
உண்மையிலே தங்களுக்கு எத்தகைய முன்னேற்றம் வேண்டும் என்பதை சபா மக்களில் சிலர், இன்னும் முழுமையாக உணரவில்லை. இதன் காரணமாகவே சபாவில் உள்கட்டமைப்பு வசதிகள் மிக மோசமான நிலையில் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த சனிக்கிழமை சபாவிற்கு வருகை புரிந்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், சபா மக்களுக்கு உதவுவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
அவரின் உத்தரவாதத்தை கூட உணர முடியாத நிலையில் சபா மக்கள் சிலர் இருந்தாலும், சிறந்த தலைமைத்துவம் வேண்டும் என்பதில் ஒட்டுமொத்த மக்கள் உறுதியாக இருப்பதாக மாணவி எமிலியா சிடின் தெரிவித்தார்.








