நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் மற்றும் முன்னாள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் 10 பேர், துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரின் ஆட்சியாளர் பதவியைக் கேள்விக்குள்ளாக்கி முன்னர் அனுப்பிய கடிதத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி, துவாங்கு நட்ஸாருடின் துவாங்கு ஜாஃபாரை புதிய ஆட்சியாளராக அங்கீகரிக்க ஆதரவு தெரிவித்திருந்த தங்களது நிலைப்பாட்டை அவர்கள் தற்போது மாற்றிக் கொண்டுள்ளனர்.
நவம்பர் 10ஆம் தேதியிட்ட கடிதம், அரச குடும்பங்களின் முத்திரைக் காப்பாளர் சையிட் டானியல் சையிட் அஹ்மாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அக்டோபர் 14ஆம் தேதி மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் வெளியிட்ட அறிக்கையையும், துவாங்கு முஹ்ரிஸின் ஆட்சியாளர் பதவியைத் தொடர அனுமதித்த சிரம்பான் உயர் நீதிமன்ற உத்தரவையும் தாங்கள் ஏற்றுக் கொள்வதாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.
மாநில அரசியலமைப்பையும் அரச பாரம்பரியத்தையும் மதித்து, மாநில நிர்வாகத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








