மலாக்கா மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணியளவில் மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் தொடங்கியது.
மொத்தம் 28 சட்டமன்றத் தொகுதிகளில் அடுத்த தவணைக்கான மாநில அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் வகையில் வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
இத்தேர்தலுக்காக 240 பொது வாக்குப்பதிவு மையங்களும் அம்மையங்களுக்குள் 1,213 வாக்குப்பதிவுப் பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 6 லட்சத்து 75 ஆயிரத்து166 பொது வாக்காளர்கள் இன்று வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
மேலும், வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணி வரை நடைபெறவுள்ள நிலையில், குறைந்தது 70 விழுக்காடு வாக்குப்பதிவு பதிவாகும் எனத் தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.
இதற்கான 14 நாள் தேர்தல் பிரசாரம் நேற்று நள்ளிரவு 11.59 மணியுடன் நிறைவடைந்தது.
இத்தேர்தலில் மொத்தம் 6 லட்சத்து 87 ஆயிரத்து 697 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில், 12,531 பேர் ராணுவத்தினர், அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் போலீசார் ஆவர்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முன்கூட்டியே வாக்குப்பதிவில் 31 மையங்கள் மூலமாகத் தகுதி பெற்ற 9 ஆயிரத்து 917 பேரில், 9 ஆயிரத்து 417 பேர் நேரடியாக வாக்களித்துள்ளனர்.
இது 94.96 விழுக்காடாகும். மேலும், 2 ஆயிரத்து 614 பேர் தபால் வாக்குகள் மூலமாகவும் வாக்களித்துள்ளனர்.
இதனிடையே மொத்தமுள்ள 28 சட்டமன்றத் தொகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 79 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றதைத் தொடர்ந்து, இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.








