ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள தலைவர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், அமைச்சரவையில் அரசியல் பதற்றம் எதுவும் இல்லை எனப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலங்களில் அரசியல் சூழல் சற்று சூடுபிடிப்பது இயல்பானது என்றும், தேர்தல் முடிந்ததும் நிலைமை மீண்டும் வழக்கமான நிலைக்குத் திரும்பிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இரு துணைப் பிரதமர்கள் உட்பட அனைத்து அமைச்சர்களும் வழக்கம்போல் கலந்து கொண்டதாகவும், நாட்டின் வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அன்வார் தெரிவித்தார்.
மலாக்கா மாநிலத் தேர்தல் பிரசாரத்தின்போது, துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி மற்றும் ஜசெக. தலைவர்களிடையே ஏற்பட்ட கருத்து மோதல்களைத் தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டத்தின் நிலவரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அன்வார் இவ்வாறு பதிலளித்தார்.
அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்த ஊகங்கள் நிலவி வரும் நிலையில், தற்போதைக்கு அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டையும் அன்வார் வெளிப்படுத்தியுள்ளார்.








