கோலாலம்பூர், ஆகஸ்ட் 12-
பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான அரசாங்கத்தில் பிரதமர் பதவியிலிருந்து தாம் விலகுவதற்கு அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடிதான் காரணம் என்று அவர் கூறியிருக்கும் வாதத்தை முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது நிராகரித்துள்ளார்.
தாம் பதவி விலகுவதற்கு அகமட் ஜாஹிட் காரணம் அல்ல என்று துன் மகாதீர் விளக்கினார்.
தாம் தலைமையேற்ற பெர்சத்து கட்சி, தம்முடைய ஆலோசனையை பின்பற்றத் தவறியதன் காரணமாக பிரதமர் பதவியிலிருந்து கெளரவத்துடன் விலகியதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.
தம்மை பிரதமர் பதவிலிலிருந்து வீழ்த்திய ஒரு மாவீரனைப் போல அகமட் ஜாஹிட் மார்த் தட்டிக்கொள்ளவோ, நெஞ்சை உயர்த்தவோ அவசியமில்லை என்று துன் மகாதீர் தெரிவித்தார்.
அம்னோவை சட்டவிரோதக் கட்சியாக பிரகடனம் செய்வதற்கு துன் மகாதீர் திட்டமிட்டு இருந்ததால், அவரை பிரதமர் பதவிலிருந்த தாம் வீழ்த்தியதாக அகமட் ஜாஹிட் அறிவித்து இருப்பது தொடர்பில் துன் மகாதீர் இன்று எதிர்வினையாற்றினார்.








