கோலாலம்பூர், மே 23-
இலக்கிடப்பட்டவர்களுக்கு மட்டுமே டீசலுக்கான உதவித்தொகையை வழங்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக கூறியுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களை கவலையில் ஆழ்த்தியிருப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுதீன் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
அந்நடவடிக்கை அமலாக்கம் காண்பதற்கான தேதியையும் மக்களுக்கு உதவித்தொகை வழங்கும் முறை குறித்தும் அன்வார் தெளிவாக விவரிக்கவில்லை.
டீசல் விலை எப்போது அதிகரிக்கும்? உதவித்தொகைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற தகவல்களை அறிய மக்கள் காத்திருக்கின்றனர்.
ஒற்றுமை அரசாங்கம் அமைந்து ஒன்றறை ஆண்டுகள் ஆகியும் கூட, நடப்பு அரசாங்கம் முதலில் திட்டங்களை அறிவித்துவிட்டு, பின்னர் அது குறித்து யோசிக்கும் கொள்கையை கடைப்பிடித்து வருகின்றது.
இலக்கிடப்பட்ட மக்களுக்கு மட்டுமே டீசலுக்கான உதவித்தொகை என்றாலும், ஒட்டுமொத்த பொருளாதார சங்கிலியை அது உற்படுத்தியுள்ளதால், மக்களுக்கே முழுபாதிப்பை வழங்கும் என ஹம்சா ஜைனுதீன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.








