கோலாலம்பூர், டிசம்பர்.27-
கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே இன்று எட்டப்பட்ட உடனடி போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மனதார வரவேற்றுள்ளார்.
சண்டையை நிறுத்தி, படைகளை அந்தந்த இடங்களிலேயே நிலைநிறுத்துவதற்கான இந்த முடிவு, குறிப்பாக பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக ஆசியான் தலைவருமான டத்தோ ஶ்ரீ அன்வார் சுட்டிக் காட்டினார்.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஆசியான் கண்காணிப்புக் குழு, போர் நிறுத்தத்தை உறுதிச் செய்யும் என்றும், இரு நாடுகளின் தற்காப்புத் துறைகளுக்கு இடையே நேரடித் தொடர்பு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2026 ஜனவரி 1-ஆம் தேதியுடன் மலேசியா தனது ஆசியான் தலைமைத்துவத்தை பிலிப்பைன்ஸிடம் ஒப்படைக்க உள்ள நிலையில், இப்பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டத் தேவையான அனைத்து முயற்சிகளுக்கும் மலேசியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என பிரதமர் உறுதி அளித்தார்.








